கூவாகத்தில் களைகட்டும் சித்திரை திருவிழா: 'அரவான்' கதையில் சங்கமிக்கும் திருநங்கைகள்!

 
கூவாகம் கூவாகம்

உலகமே வியந்து பார்க்கும் உன்னதமான திருவிழாக்களில் ஒன்றான கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா, இன்று (ஏப். 14, செவ்வாய்க்கிழமை) 'சாகை வார்த்தல்' நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது. புராண காலத்து மகாபாரதக் கதையைத் தற்காலத்திலும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்தத் திருவிழாவைக் காண, இப்போதே கூவாகம் கிராமம் களைகட்டத் தொடங்கிவிட்டது.

இன்று சித்திரை முதல் நாளில் சுவாமிக்குக் கூழ் ஊற்றும் 'சாகை வார்த்தல்' நிகழ்ச்சி பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. நாளை மாலையில் பந்தலடியில் 'காப்பு கட்டுதல்' நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏப். 27ம் தேதியன்று மாலை கம்பம் நிறுத்தப்பட்டதும், உள்ளூர் வாசிகள் தங்கள் நேர்த்திக்கடனாகத் தாலி கட்டிக் கொள்வார்கள்.

கூவாகம்

கூவாகம் திருவிழாவின் ஆன்மாவே திருநங்கைகள் பங்கேற்கும் அந்த இரண்டு நாட்கள் தான். ஏப். 28ம் தேதியன்று இரவு, உலகெங்கிலும் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், கிருஷ்ணரின் அவதாரமான பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். "அரவானை" மணந்து கொண்ட மகிழ்ச்சியில் அன்று இரவு முழுவதும் கும்மி அடித்து, ஆடிப்பாடித் தங்களின் திருமண வாழ்வைக் கொண்டாடுவார்கள்.

கூவாகம் திருவிழா

ஏப். 29ம் தேதி அன்று காலை பிரம்மாண்டமான திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். தேர் 'பந்தலடி'யை அடைந்ததும், அரவான் பலியிடப்படும் நிகழ்ச்சி (சுவாமி புறப்பாடு) நடக்கும். தன் கணவன் அரவான் இறந்துவிட்டதாகக் கருதி, திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுது, தங்கள் தாலியை அறுத்து, வளையல்களை உடைத்துக் கைம்மை (விதவை) கோலம் பூணுவார்கள். பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி வெள்ளை புடவை அணிந்து கொள்வார்கள்.