சித்திரை பிரதோஷ வழிபாடு... சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு - மகா நந்திக்கு விசேஷ அபிஷேகம்!
சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்றான பிரதோஷத்தையொட்டி, சித்திரை மாதத்தின் வளர்பிறை பிரதோஷ வழிபாடு சேலம் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோவிலில் உள்ள பிரம்மாண்ட மகா நந்திக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் மற்றும் திருநீறு உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்திற்குப் பின் நந்தியம் பெருமானுக்கு அருகம்புல் மாலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வாழப்பாடி நகரில் உள்ள முக்கிய சிவாலயங்களிலும் மாலை வேளையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வாழப்பாடி அக்ரஹாரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மூலவர் மற்றும் நந்திக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பெரியசாமி நகரில் அமைந்துள்ள வைத்தியநாதர் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்று "நமச்சிவாய" கோஷமிட்டு ஈசனை வழிபட்டனர்.

வழிபாட்டின் நிறைவாக, கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் சார்பில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
