சித்ரா பெளர்ணமி... வழிபட உகந்த நேரமும், வழிபாட்டு முறைகளும்!
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி திதி, 'சித்ரா பௌர்ணமி' என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக இன்று சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். எமதர்மனின் கணக்கப்பிள்ளையான சித்ரகுப்தர் அவதரித்த தினமாக இது கொண்டாடப்படுகிறது. மனிதர்கள் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் சித்ரகுப்தரை இன்று வழிபடுவதன் மூலம், நமது பாவ மூட்டைகள் குறைந்து புண்ணியங்கள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த நாளில் தான் இந்திரன் பூஜித்து தனது சாபத்தைப் போக்கிக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இன்று அதிகாலையிலேயே நீராடி, வீட்டின் வாசலில் கோலமிட்டு வழிபாட்டைத் தொடங்க வேண்டும். சித்ரகுப்தருக்குப் பிடித்தமான எள்ளு சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம். ஒரு தாளில் சித்ரகுப்தரின் உருவத்தை வரைந்தோ அல்லது மனதார நினைத்தோ, "எங்கள் பாவங்களை மன்னித்து நல்வழிப்படுத்து" என்று வேண்டிக்கொண்டு நோட்டுப் புத்தகம் மற்றும் பேனாவை வைத்துப் பூஜிப்பது வழக்கம். மாலையில் சந்திரன் உதயமாகும் வேளையில் நிலவின் ஒளியில் அமர்ந்து 'நிலாச் சோறு' உண்பது ஆரோக்கியத்திற்கும் மனதிற்கும் மிகச் சிறந்தது. திருவண்ணாமலை போன்ற தலங்களில் கிரிவலம் செல்வது இன்று கோடி புண்ணியங்களைத் தரும்.

இன்று மே 1-ந் தேதி அதிகாலை முதலே பௌர்ணமி திதி தொடங்கிவிட்டது. இன்று மாலை மற்றும் இரவு முழுவதும் பௌர்ணமி திதி நீடிப்பதால் நிலவு வழிபாட்டிற்கு இதுவே உகந்த நேரமாகும்.
இன்று காலை 9:15 மணி முதல் 10:15 மணி வரையிலும், மாலை 4:45 மணி முதல் 5:45 மணி வரையிலும் நல்ல நேரமாகப் பார்க்கப்படுகிறது. ராகு காலம் காலை 10:30 முதல் 12:00 வரை என்பதால், அந்த நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் பூஜைகளைச் செய்யலாம். குறிப்பாக மாலை 6:00 மணிக்கு மேல் நிலவு உதிக்கும் நேரத்தில் தீபமேற்றி வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
