சித்ரா பெளர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்... பக்தர்களுக்கு 100 இலவச பேருந்துகள் இயக்கம்!
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காகத் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து முன்எப்போதும் இல்லாத வகையில் அதிரடியான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
கிரிவலப் பாதையில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து நகருக்குள் எளிதாக வரவும் 100 கல்வி நிறுவனப் பேருந்துகள் முற்றிலும் இலவசமாக இயக்கப்பட உள்ளன.

பக்தர்களின் வசதிக்காகத் திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப் பாதையின் முக்கிய இடங்களுக்குச் செல்ல 100 தனியார் கல்வி நிறுவனப் பேருந்துகள் 'கட்டணமில்லா சேவை'யாக இயக்கப்பட உள்ளன.
இதுதவிர, விரைவாகச் செல்ல விரும்பும் பக்தர்களுக்காக 100 மினி பேருந்துகள் வெறும் 10 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்பட உள்ளன. இந்த வாகனங்கள் எவ்வித தடையுமின்றி செல்வதற்காகச் சுங்கச்சாவடிகளில் பிரத்யேகப் பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சிறப்பு வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும், அவர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளைச் செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. 40 லட்சம் பக்தர்கள் கூடும் இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கப் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
"பக்தர்களுக்குச் சிறப்பான தரிசனம் மற்றும் கிரிவல அனுபவத்தைத் தருவதே எங்கள் நோக்கம்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலவச பேருந்து வசதி மற்றும் சீரான போக்குவரத்துத் திட்டம், குடும்பத்துடன் வரும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சித்ரா பவுர்ணமிக்காகத் திருவண்ணாமலை நகரம் தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
