ச்சோ க்யூட்... திருமண மேடையாக மாறிய பிரசார மேடை.. தாலி எடுத்துக் கொடுத்த திருமா!
காட்டுமன்னார்கோவில் தேர்தல் களம் வழக்கமான அரசியல் மோதல்களைத் தாண்டி, இப்போது ஒரு நெகிழ்ச்சியான திருமண வைபவத்தால் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் அனல் பறக்கப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நடுத்திட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது வருங்கால மனைவியுடன் திடீரென மேடையேறி, "உங்கள் கையால் தான் எங்கள் கல்யாணம் நடக்கணும்" என நச்சரிக்க, ஒரு நொடி மேடையே ஸ்தம்பித்தது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஒரு நிமிடம் கூட வீணாக்க முடியாது என்ற சூழலிலும், தொண்டனின் ஆசையைத் தட்டாத தலைவர்கள் சட்டென திருமணத்திற்குச் சம்மதித்தனர். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் திருமாவளவன் இருவரும் புன்னகையுடன் தாலியை எடுத்துக்கொடுக்க, ஆயிரக்கணக்கான தொண்டர்களின் விசில் சத்தத்திற்கு இடையே சங்கர் தனது துணையின் கழுத்தில் தாலி கட்டினார். அரசியல் மேடை திடீரென சுப நிகழ்ச்சியாக மாறியதைப் பார்த்த பொதுமக்களும், அந்த ஜோடியை மனதார வாழ்த்தித் தள்ளினர்.

பரபரப்பான தேர்தல் வேலைகளுக்கு மத்தியிலும், ஒரு தொண்டனின் உணர்வுக்கு மதிப்பளித்துத் தாலி எடுத்துக் கொடுத்த இந்தச் சம்பவம் காட்டுமன்னார்கோவிலில் செம வைரலாகி வருகிறது. "வோட்டு கேட்க வந்த இடத்தில் இப்படியொரு பாசமான சம்பவமா?" என அந்த ஊர் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். எது எப்படியோ, சங்கர்-சங்கரி ஜோடிக்குத் தலைவர்கள் முன்னிலையில் நடந்த இந்தத் திருமணம், 2026 தேர்தல் களத்தின் மறக்க முடியாத ஒரு 'க்யூட்' தருணமாக மாறிவிட்டது!
