சிகரெட் தகராறில் கொடூரம்... இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த பள்ளி மாணவர்கள்!

 
salem salem

 

சேலம் மாவட்டம் மணியனூர் அருகே, மது போதையில் ஏற்பட்ட தகராறில் கோகுல் (19) என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் பிடித்ததை வீட்டில் காட்டி கொடுத்ததாக எழுந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், 10 மற்றும் 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் இருவரும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனும் இணைந்து இந்த பயங்கர செயலில் ஈடுபட்டுள்ளனர். கொலையைச் செய்த பிறகு சிறுவர்கள் அந்த இடத்தில் வீடியோ எடுத்து கூச்சலிட்டது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோகுல் மற்றும் அந்த சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது இந்த மோதல் உருவானது தெரியவந்துள்ளது. கோகுலை சரமாரியாகத் தாக்கிய சிறுவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திச் சாய்த்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கோகுல் சரிந்து விழுந்ததைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த 3 சிறுவர்களையும், அக்கம் பக்கத்தினர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த சேலம் போலீசார், உயிரிழந்த கோகுலின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட சிறுவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இளம் வயதிலேயே போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.