திருச்சியில் சினிமா பாணியில் துணிகரம்... டம்மி துப்பாக்கிக் காட்டி, நகை மதிப்பீட்டாளரைத் தாக்கி 1 கிலோ தங்கம் கொள்ளை!

 
வங்கி திருச்சி கொள்ளை போலீசார் வங்கி திருச்சி கொள்ளை போலீசார்

திருச்சி பெரிய செட்டித் தெருவில் பட்டப்பகலில் வீடு புகுந்து, நகை மதிப்பீட்டாளரைத் தாக்கி ஒரு கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த உதய் (36). இவர் திருச்சியில் தங்கி நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினர் விடுமுறைக்காகச் சொந்த ஊர் சென்றிருந்ததால், உதய் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

நகைக்கடை முகமூடி கொள்ளை

நேற்று மதியம் 12 மணியளவில் உதயைச் சந்திக்க வேண்டும் எனக் கூறி 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அவர்களை உதயின் உதவியாளர் நிதின் வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே திடீரென அந்த கும்பல் உதயைக் கடுமையாகத் தாக்கி குளியலறைக்குள் தள்ளிப் பூட்டியதுடன், நிதினையும் கட்டிப் போட்டனர்.

கொள்ளையர்கள் உதயின் வீட்டில் இருந்த சுமார் 1 கிலோ தங்க நகைகளைச் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பினர். மேலும், தங்களின் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களைச் சேதப்படுத்தி, அதன் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளைக்குப் பிறகு முகமூடி அணிந்து கொண்ட அந்த 5 பேரும், வெளியே தயாராக நின்றிருந்த ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் மிரட்டுவதற்காக "டம்மி" துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

படுகாயமடைந்த உதய் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்துக் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உதய்க்குத் தெரிந்த நபர்களே இந்தத் திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மாநகரப் பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் திருச்சி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், வெளியூர் செல்பவர்கள் தங்கள் வீடுகளின் பாதுகாப்பு குறித்துக் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் நினைவூட்டுகிறது.