குஷியில் குடிமகன்கள்... நாளை முதல் ஆன்லைனில் டாஸ்மாக் முன்பதிவு - புதிய இணையதள சேவை அறிமுகம்!

 
பாட்டில் டாஸ்மாக்

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், நுகர்வோர் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும் ஆன்லைனில் மதுபான முன்பதிவு செய்யும் வசதியை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் tasmace2e.in என்ற புதிய பிரத்யேக இணையதளம் இதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் லாக்-இன் செய்யும் நுகர்வோர் முதலில் 21 வயதைக் கடந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

டாஸ்மாக்

தமிழ்நாட்டிலுள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் உள்ள மது வகைகள் மற்றும் அவற்றின் இருப்பு நிலவரத்தை (ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் புதுப்பிக்கப்படும்) அறிய முடியும். விரும்பிய மது வகையைத் தேர்வு செய்து வீட்டிலிருந்தபடியே கட்டணம் செலுத்தியவுடன், QR குறியீட்டுடன் கூடிய ரசீதும், குறிப்பிட்ட கடைக்குச் செல்வதற்கான கூகுள் மேப் வழிகாட்டுதலும் வழங்கப்படும்.

முன்பதிவு செய்த டாஸ்மாக் கடையில் QR குறியீட்டைக் காண்பித்து, கூடுதல் கட்டணமின்றி சரியான MRP விலையிலேயே மதுபானங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைனில் மது முன்பதிவு செய்யும் திட்டம் சமூகத்திற்கு பெரும் ஆபத்தானது என்றும், இது மதுப்புழக்கத்தை எளிதாக்கும் பிற்போக்கான முயற்சி என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்குப் பதிலாக இதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவருவதைத் தவிர்த்து, இந்த முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.