சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - மகாராஷ்டிராவில் பரபரப்பு!
மகாராஷ்டிர மாநிலம் லாதூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
'அரசுப் பள்ளிகளை மேம்படுத்துங்கள்' என்ற பிரச்சார இயக்கத்தின் கீழ், அபிஜீத் திப்கே மற்றும் அவரது அமைப்பினர் லாதூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஜில்லா பரிஷத் அரசுப் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கொண்டு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், ஆசிரியர்களைப் பணி செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இச்சம்பவம் தொடர்பாகப் பள்ளியின் ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் லாதூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 3 முக்கிய பிரிவுகளின் கீழ் CJP நிறுவனர் அபிஜீத் திப்கே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
