சிஜேபி அமைப்பின் 'திரங்கா' பேரணி.. டெல்லியில் 6,000 போலீசார், பாதுகாப்புப் படையினர் குவிப்பு!
காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 'திரங்கா' பேரணியை முன்னிட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காக்கும் வகையில் அப்பகுதியில் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், மத்திய ஆயுதக் காவல் படையின் 220 கம்பெனி வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தலைநகரில் சம்மந்தப்பட்ட பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழலில், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தவிர்க்கக் காவல்துறை தரப்பில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கான்நாட்டுப் பகுதி மற்றும் மத்தியப் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கிய வீதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், வன்முறைச் சம்பவங்களைத் தவிப்பதற்காகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்காகவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் வழியே கூடுதல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்படாத பேரணியில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் எனவும், மீறுவோர் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலவும் பரபரப்பான சூழலைக் கருத்தில் கொண்டு, டெல்லி முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்புப் பலகட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
