சட்டசபையில் மோதல்: "டாய்லெட் கூட இல்ல... அங்க மல்டி லெவல் கார் பார்க்கிங் எதற்கு?" - சேகர்பாபுவிடம் அமைச்சர் ரமேஷ் ஆவேசம்!

 
சேகர்பாபு அமைச்சர் ரமேஷ்

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று அறநிலையத்துறை தொடர்பான விவாதத்தின் போது, கடந்த திமுக ஆட்சியில் கோயில் நிதியை வர்த்தகக் காரணங்களுக்காகப் பயன்படுத்தியதாகப் புதிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

குன்னூர் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான முறையான கழிவறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் சரியாகச் செய்து தரப்படவில்லை. ஆனால், தினசரி வெறும் 500 பக்தர்கள் மட்டுமே வந்து செல்லும் அந்தக் கோயிலில், முந்தைய ஆட்சியில் பல கோடி ரூபாய் கோயில் நிதியை எடுத்துப் பிரமாண்டமான ‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ அமைத்துள்ளனர். பக்தர்களுக்குக் குடிக்கத் தண்ணீரும், கழிவறை வசதியும் இல்லாத ஒரு கோயிலில், நிதியை வர்த்தக நோக்கத்தில் கார் பார்க்கிங் அமைக்கப் பயன்படுத்தியது ஏன் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

ரமேஷ்

கடந்த காலங்களில் ஆன்மிகத் தலங்கள் வணிக மயமாக மாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், "கோயில்களுக்கான நிதி என்பது ஆன்மிகப் பணிகளுக்கும், பக்தர்களின் தேவைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆன்மிகத் தலங்களை முழுமையாகக் 'கமர்சியலாக' மாற்ற முயற்சித்தார்கள். கோயில்களில் வணிக நோக்கிலான தேவையற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால், தற்போது கோயில் நிதியை வர்த்தகக் காரணங்களுக்காகப் பயன்படுத்திய பல்வேறு திட்டங்களை நமது அரசு ரத்து செய்துள்ளது. முந்தைய அரசு பக்தர்களுக்கான உண்மையான வசதிகளை மேம்படுத்தத் தவறிவிட்டது" என்றார். இதற்குத் தவெக அரசை எதிர்த்துத் திமுக உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அவையில் தங்களது கடுமையான மறுப்புகளையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்தனர்.