தைலாபுரத்தில் உச்சகட்ட மோதல் - "என் மகனாலேயே உயிருக்கு ஆபத்து" - டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் தரப்பு புகார்!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு, தற்போது காவல்துறை வரை சென்று தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "எனது மகன் அன்புமணியால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளது" என டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக, ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் அதிரடியாகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் மீது இரண்டு முறை இதே போன்ற புகார்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3-வது முறையாக இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், "முன்பு அளிக்கப்பட்ட இரண்டு புகார்கள் மீதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும்; புகாருக்குள்ளான அன்புமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், பாமக-வின் உச்சகட்டத் தலைமைக்குள் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தந்தைக்கும் மகனுக்கும் இடையே கட்சி நிர்வாகம் மற்றும் கூட்டணி விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அது தற்போது "உயிருக்கு ஆபத்து" என்ற நிலைக்குச் சென்றிருப்பது தைலாபுரம் தோட்ட வட்டாரத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

அன்புமணி தரப்பிலிருந்து இந்தப் புகார்கள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஒரு காலத்தில் "பழமும் சர்க்கரையும்" போல இருந்த தந்தை - மகன் உறவு, இன்று காவல்துறை வரை சென்றிருப்பது தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
