10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து... சவுதி, அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் +2 பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தீவிரமான போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி மீண்டும் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ வாரியம் நேற்று இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, வளைகுடா நாடுகளில் நிலவும் அசாதாரண சூழலால் தேர்வுகள் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 9 (திங்கள்), மார்ச் 10 (செவ்வாய்) மற்றும் மார்ச் 11 (புதன்) ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் நிலைமையை ஆய்வு செய்த பிறகு பின்னர் அறிவிக்கப்படும். மார்ச் 12ம் தேதி முதல் நடைபெறவிருந்த தேர்வுகள் குறித்து மார்ச் 10-ஆம் தேதி அன்று மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

மார்ச் 7 முதல் மார்ச் 11 வரை நடைபெறவிருந்த அனைத்து 10-ஆம் வகுப்புத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எவ்வாறு அறிவிக்கப்படும் என்பது குறித்துப் பின்னர் தெரிவிக்கப்படும் என வாரியம் கூறியுள்ளது.
இந்தத் தேர்வு ஒத்திவைப்பு மற்றும் ரத்து நடவடிக்கைகள் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்குப் பொருந்தும்/

ஈரான் உயர்மட்டத் தலைவர் காலமானதைத் தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வான்வெளி மூடல் (Airspace closure), போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பாமல், தங்களது பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் சன்யம் பரத்வாஜ் அறிவுறுத்தியுள்ளார்.
