இன்று முதல் 10ம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்; துணைத்தேர்வு தேதிகளும் அறிவிப்பு!

 
தேர்வுகள் இயக்ககம் தேர்வுகள் இயக்ககம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான அடுத்தகட்ட முக்கிய அறிவிப்புகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன. மாணவர்கள் தங்களின் பள்ளிகள் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவோ இந்தத் தற்காலிகச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசுத் தேர்வுகள் இயக்குநர் அதிரடி அறிவிப்பு

தங்களின் விடைத்தாள்களைக் கூடுதல் சரிபார்ப்பு செய்ய விரும்பும் மாணவர்களுக்காக, விடைத்தாள் நகல் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் தேவைப்படும் மாணவர்கள் இன்று முதல் மே 27 வரையிலான தேதிகளில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நகலைப் பெற்ற பிறகு, மறுமதிப்பீடு அல்லது மறுமொத்தக் கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அதற்கான கட்டணங்களைச் செலுத்தி ஜூன் 17 முதல் ஜூன் 19 வரையிலான காலக்கட்டத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

தேர்வுகள்

மேலும், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களுக்கும், தங்களின் மதிப்பெண்களை மேலும் உயர்த்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கும் 'தற்காலிக துணைத்தேர்வு' நடத்தப்படவுள்ளது. இந்தத் துணைத்தேர்வுகள் வரும் ஜூலை 8ம் தேதி தொடங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள், மே 26 முதல் ஜூன் 9ம் தேதி வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.