பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்!
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவனைச் சக மாணவர்கள் 12 பேர் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் தம்மைகடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கமரெட்டி பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவன் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த அபிஷேக்கை, நேற்று முன் தினம் இரவு விடுதியில் இருந்த சக மாணவர்கள் 12 பேர் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் மாணவன் அபிஷேக்கின் முகம் மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
படுகாயமடைந்த மாணவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த பள்ளி நிர்வாகத்தினர், மாணவன் கட்டிட மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாகப் பெற்றோருக்குப் பொய்யான தகவல் கொடுத்துள்ளனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த பெற்றோர் மாணவனிடம் விசாரித்தபோது, சக மாணவர்கள் 12 பேர் தன்னைச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய உண்மையைக் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவனைத் தாக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
