15-வது மாடியில் இருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், படிப்பின் அதிகப்படியான மனஅழுத்தம் காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் விஜயநகர் காவல் எல்லைக்குட்பட்ட 'கௌர் சித்தார்த்தம்' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று மாலை சுமார் 6:45 மணியளவில் தனது குடியிருப்பின் 15-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், மாணவியின் அறையில் நடத்திய சோதனையில் 2 பக்கங்கள் கொண்ட உருக்கமான தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில், தன் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், படிப்பின் அதிகப்படியான சுமை மற்றும் மனஅழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் மாணவி குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது குடும்பத்தினரும் நண்பர்களும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுமாறு அவர் அதில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
