10-ம் வகுப்பு மாணவி தற்கொலை... போலீசுக்குத் தெரியாமல் உடலை எரித்ததால் பரபரப்பு... தந்தை மீது வழக்குப்பதிவு!
தர்மபுரி அருகே பச்சனம்பட்டியில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சட்ட விதிகளுக்குப் புறம்பாக உடலை எரித்ததாக அவரது தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பச்சனம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராஜாவின் மகள் பிரபா (15). இவர் கடகத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 23ம் தேதி இரவு, பிரபா தனது வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பிரபா பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, முறைப்படி போலீசாருக்குத் தகவல் தெரிவித்து பிரேதப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், பிரபாவின் குடும்பத்தினர் எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல், உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று அவசர அவசரமாகச் சுடுகாட்டில் எரித்து விட்டனர்.
இது குறித்துத் தகவல் அறிந்த கடகத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளி, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். மாணவியின் மரணம் குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக உடல் எரிக்கப்பட்டதை உறுதி செய்த அவர், தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில், மாணவியின் தந்தை ராஜா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான காரணம் என்ன? போலீசாருக்குத் தெரிவிக்காமல் உடலை எரிக்க வேண்டிய அவசியம் என்ன? ஏதேனும் உண்மைகள் மறைக்கப்படுகின்றனவா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி உயிரிழந்த சோகம் ஒருபுறமிருக்க, அவரது உடல் எரிக்கப்பட்ட விவகாரம் தர்மபுரியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
