கள்ளக்காதலை பார்த்த 10-ம் வகுப்பு மாணவர் விஷம் கொடுத்து கொலை… பெண், சிறுவன் கைது!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில், தங்களது ரகசிய உறவைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ம் வகுப்பு மாணவருக்கு குளிர்பானத்தில் களைக்கொல்லி மருந்தைக் கலந்து கொடுத்த பெண் மற்றும் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 18 நாட்கள் சிகிச்சை பெற்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரு பகுதியைச் சேர்ந்த ரவி (15), சத்துப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தசரா விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அபர்ணா (19) என்ற பெண்ணுக்கும், 14 வயது சிறுவனுக்கும் இடையே இருந்த நெருக்கத்தைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை குடும்பத்தினரிடம் தெரிவிப்பதாக ரவி எச்சரித்ததால், இருவரும் அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்படி, அக்டோபர் 21-ம் தேதி ரவியை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்ற சிறுவன், களைக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட ரவி முதலில் கம்மம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் வாரங்கல் எம்.ஜி.எம். மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு 18 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு நவம்பர் 8-ம் தேதி உயிரிழந்தார்.இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அபர்ணாவையும் சிறுவனையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவன் சிறார் கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
