நகை, பணத்துக்காக பள்ளி முதல்வரை 27 முறை கத்தியால் குத்திக் கொன்ற 10-ம் வகுப்பு மாணவர்கள்!
தெலுங்கானா மாநிலத்தில் கண்டித்த பள்ளி முதல்வரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு பணத்தைக் கொள்ளையடித்த 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நல்கொண்டா மாவட்டம் கொண்டமல்லேபள்ளியில் இயங்கி வரும் நாகார்ஜுனா பப்ளிக் பள்ளி முதல்வரான கல்லு ரூபா ரெட்டி, விதிமுறைகளை மீறி விடுதியில் ஆயிரக்கணக்கில் பணமும் மொபைல் போனும் வைத்திருந்த இரண்டு 10-ம் வகுப்பு மாணவர்களைக் கண்டித்துள்ளார். மேலும் அவர்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, விடுதியை விட்டு வெளியேற்றி வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லுமாறு மாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், ரூபா ரெட்டியின் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டி, ஐந்து நாட்கள் அவரது வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதற்காகக் கையுறை, கத்தி மற்றும் முகமூடி ஆகியவற்றை வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, ஒரு மாணவர், பள்ளி முதல்வர் ரூபாரெட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவரது படுக்கையறையில் இருந்த ₹2.50 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்ப முயன்றபோது அவரது தொப்பி கீழே விழுந்துள்ளது. அவரை ரூபா ரெட்டி அடையாளம் கண்டுகொண்டதால், தான் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் மற்றொரு மாணவருடன் சேர்ந்து, ரூபாரெட்டியை அடுத்தடுத்து 27 முறை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
இந்த கொலையில் பயன்படுத்திய பொருட்களைப் புதைத்துவிட்டு, கொள்ளையடித்த பணத்தில் மாணவர்கள் கோவாவுக்குச் சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையின் போது பிடிபட்ட மாணவர்களிடமிருந்து ₹1.54 லட்சம் ரொக்கம், ஐபோன் மற்றும் முதல்வரின் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
