“BEEF சாப்பிடுவியா?” கோவையில் சாதிய வன்கொடுமையால் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - ஆசிரியர் கைது!
கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அகிலன், சாதிய வன்கொடுமை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் ஆசிரியர் விஜயகுமார் என்பவர், "யாரெல்லாம் மாட்டிறைச்சி (Beef) சாப்பிடுவீர்கள்?" என்று கேட்டுள்ளார். அப்போது அகிலன் உள்ளிட்ட 4 மாணவர்கள் எழுந்து நின்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சக மாணவர்கள் அகிலனைச் சாதிப் பெயர் சொல்லித் திட்டி, சாதிய ரீதியாக ஒடுக்கியுள்ளனர்.

இது குறித்து மாணவன் அகிலன் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் அகிலனைச் சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், சமத்துவத்தைப் பயிற்றுவிக்க வேண்டிய கல்விக்கூடங்களில் சாதிய வன்கொடுமை தலைதூக்கியிருப்பது கடும் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களிடையே தீண்டாமையை அகற்றவும், நன்னெறி கல்வியை ஊக்குவிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
