12ம் வகுப்பு மாணவிக்கு லிப்ட் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு வலைவீச்சு!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில், பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்ல முயன்ற பிளஸ்-2 மாணவிக்கு லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர், பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்புவதற்காக வாகனத்திற்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ராகேஷ் என்ற இளைஞர், மாணவியை வீட்டில் பாதுகாப்பாக இறக்கிவிடுவதாகக் கூறித் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். ஆனால், திட்டமிட்டபடி மாணவியின் வீட்டிற்குச் செல்லாமல், வாகனத்தைத் திசை திருப்பி ஆள்நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்கு மாணவியைக் கடத்திச் சென்றுள்ளார்.

வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணவி அவரிடமிருந்து தப்பிக்கப் போராடி முயன்றபோது, அந்த இளைஞர் மாணவிக்குக் கடுமையான கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மாணவியைக் மிரட்டி வனப்பகுதியில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மாணவியை வீட்டின் அருகே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், நாயுடுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ராகேஷ் என்ற இளைஞரைப் பிடிக்கச் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
