டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு... திருவள்ளூரில் சோகம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 வயதுப் பள்ளி மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற 5-ம் வகுப்பு மாணவனுக்குக் கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது.

பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தொடர் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவனின் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பள்ளிக் குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலம் தொடங்கும் நிலையில், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இணைந்து உடனடியாகத் தீவிரக் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும், தூய்மைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
