9ம் வகுப்பு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவன் - உ.பி.யில் அதிர்ச்சி!
உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் 9ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பலியா மாவட்டம் மனியர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், இக்கொடூரச் செயலைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, அதை வெளியே சொல்லக் கூடாது எனச் சிறுமியை மிரட்டியுள்ளான்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது தாயாரிடம் தெரிவிக்கவே, அவர் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனைக் கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
