பள்ளிக்குச் சென்ற 9ம் வகுப்பு மாணவிகள் திடீர் மாயம்... போலீசாரின் தேடுதல் வேட்டையில் மாணவிகள் உறவினர் வீட்டில் மீட்பு!
பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 9-ஆம் வகுப்பு மாணவிகள் இருவரும், வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு மாணவிகள் இருவரும் உறவினர் வீட்டில் பத்திரமாக மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் வெங்கலம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் ரசிகா (14) மற்றும் காளிமுத்து என்பவரின் மகள் பிரியதர்சினி (வயது 14) ஆகிய இருவரும் 9-ஆம் வகுப்பு படித்து வந்தனர். வழக்கம் போல கடந்த நேற்று காலை மாணவிகள் இருவரும் சீருடை அணிந்து தங்களது வீடுகளிலிருந்து பள்ளிக்குக் கிளம்பிச் சென்றுள்ளனர்.
பள்ளிக்கு வந்த அவர்கள், தங்களது வகுப்பறையில் புத்தகப் பைகளை வைத்துவிட்டு வகுப்பிற்குள் நுழையாமல் வெளியே சென்றுள்ளனர். சிறிது நேரம் கடந்தும் வகுப்பிற்குத் திரும்பாததால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் சக மாணவர்களிடம் விசாரித்தனர். வகுப்பறைக்கு வந்த வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு மாணவிகள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், உடனடியாக மாணவிகளின் பெற்றோர்களுக்குத் தொலைபேசி மூலமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கள் பிள்ளைகள் இன்னும் பள்ளிக்கு வரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
மாணவிகள் இருவரும் பள்ளி வளாகத்தில் இல்லாததும், எங்கு சென்றார்கள் என்ற விவரம் தெரியாததும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அரும்பாவூர் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், பள்ளி அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்யத் தொடங்கினர்.
அப்போது வெளியான சிசிடிவி காட்சிகளில், மாயமான இரண்டு மாணவிகளும் வெங்கலத்திலிருந்து பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்குச் சென்றதும், அங்கிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றதும் போலீசாருக்குத் தெரியவந்தது. மாணவிகள் எங்கு சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
திருச்சி நோக்கிச் சென்ற மாணவிகள் குறித்துப் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் துப்பு துலக்கிய நிலையில், அவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள தங்களது உறவினர் வீீட்டிற்குச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக உஷாரான காவல்துறையினர் அந்த உறவினர் வீட்டைத் தொடர்பு கொண்டு, மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி மாணவிகள் மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். பள்ளிக்குச் சென்ற மாணவிகள் திடீரெனத் பெற்றோரிடம் சொல்லாமல் உறவினர் வீட்டிற்குச் சென்ற சம்பவம் குறித்துப் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் மிகுந்த நிம்மதி அடைந்தனர். எனினும், பள்ளி நேரத்தில் மாணவிகள் வகுப்பைவிட்டு வெளியேறி வேறு இடத்திற்குச் சென்றது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
