மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்... பொதுமக்களுக்குத் தடை.. அமித் ஷா வருகையால் பலத்த பாதுகாப்பு!
சென்னையை அடுத்த கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நாளை (ஆகஸ்ட் 20) நடைபெறவுள்ளதை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாநாட்டைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷா மாமல்லபுரம் வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடவுள்ளதால், அங்குள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகின்றன.

இந்த குறிப்பிட்ட நேர இடைவெளியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுத் தொல்லியல்துறை மூலம் அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது.
கோவளத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று நீர்வளப் பகிர்வு, பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடுகள் குறித்து ஆலோசிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்தியப் பாதுகாப்புப் படையினரின் மேற்பார்வையில், கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) மற்றும் மாமல்லபுரம் நகரப் பகுதிகளில் தீவிரப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
