கேரளத்தில் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்பு... 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்... வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை!
கேரளத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழை போன்ற மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல இடங்களில் சாலைகளையும் பாலங்களையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முழுமையாகத் தடைபட்டுள்ளது.

இந்தச் சூழலில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக மாநிலத்தில் பல இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகச் மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழை, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்குத் தீவிர மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் வானிலை எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
