கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 பயிர்க்கடன் முழு தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களில் ரூ.75,000 வரையிலான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகக் கடந்த மே 25-ஆம் தேதி, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்குப் பகுதி அளவிலான தள்ளுபடியே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை எனக் கூறி, மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
விவசாயிகளின் தொடர் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களை ஏற்று, முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற மறுபரிசீலனை கூட்டத்திற்குப் பிறகு இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரின் கடன்களும் இனி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவுள்ளன.

அரசின் இந்த திருத்த நடவடிக்கை குறித்து வெளியான அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் தற்போதைய கடன் சுமையைக் குறைக்கவும், விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த புதிய எல்லையற்ற தள்ளுபடி வரம்பு உயர்வால், தமிழகம் முழுவதும் விடுபட்டிருந்த மேலும் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள் நேரடியாகப் பெரும் பயனடைவார்கள். அரசின் இந்த மறுபரிசீலனை முடிவிற்குத் தமிழகத்தின் பல்வேறு விவசாய சங்கங்கள் தற்போது வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
