பணியின்போது உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் விஜய் உத்தரவு!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தப்பியோடிய நபரைத் துரத்திச் சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்த பெண் தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிடத் தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எம்.கண்ணகி (34), பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது அங்கு ஏற்பட்ட தகராறைத் தடுத்துள்ளார்.
அப்போது அங்கிருந்து தப்பியோடிய நபரைப் பிடிக்க அவரைத் துரத்திச் சென்றபோது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து மயக்கமடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெண் தலைமைக் காவலர் கண்ணகியின் மறைவு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
