விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் இரங்கல் - ₹30 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு!

 
காவலர் விபத்து நிவாரண நிதி முதல்வர் அறிவிப்பு காவலர் விபத்து நிவாரண நிதி முதல்வர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில், காவலர் மகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற தேவிபட்டினம் காவல் நிலையக் காவலர் மகேஷ்குமார், அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரைப் பறிமுதல் செய்தார்.

பள்ளி மானவி தற்கொலை

பின்னர், அந்த டிராக்டரைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது மிக பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூரமான விபத்தில் படுகாயமடைந்த காவலர் மகேஷ்குமார், துரதிர்ஷ்டவசமாகச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடமை ஆற்றும் போது விபத்தில் சிக்கிக் காவலர் உயிரிழந்த செய்தி கேட்டுத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்து, பறிமுதல் செய்த வாகனத்தைக் கொண்டு வரும் போது நேரிட்ட விபத்தில் உயிரிழந்த காவலர் மகேஷ்குமாரின் மறைவு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மகேஷ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் துயரத் துடைப்பு நிதியாக உடனடியாக வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.