பெரம்பூரில் கட்சிக் கொடி, பேனர்களுக்குக் தடை - முதல்வர் விஜய் உத்தரவு!

 
தவெக கொடி கட்சிக்கொடி பேனர்

தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி.ஜோசப் விஜய், தனது சொந்த சட்டமன்றத் தொகுதியான சென்னை பெரம்பூரில் புதிதாகப் புதுப்பிக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார். இந்தத் திறப்பு விழாவை ஒட்டி, பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படக் கூடாது எனத் தவெக நிர்வாகிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் விஜய் தனது சொந்தத் தொகுதியில் புதிய அலுவலகத்தைத் திறந்து வைக்கும் வேளையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை விபரங்களைத் தலைமை அறிவுறுத்தியுள்ளது: திறப்பு விழாவின் போது அப்பகுதியில் செல்லும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறோ, தேவையற்ற போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலோ ஏற்படாத வண்ணம் விழா ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜய் எம்.எல்.ஏ. தவெக

விழா நடைபெறும் பகுதியில் தவெக சார்பில் எவ்விதமான கட்சிக் கொடிகளையோ, கட்-அவுட்களையோ அல்லது விளம்பரப் பேனர்களையோ வைக்கக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியால் அண்மையில் சீரமைக்கப்பட்ட இந்த அலுவலகத் திறப்பு விழாவின் போது, தொகுதி மக்களின் நலனுக்காகச் சில முக்கிய வசதிகளும் உள்கட்டமைப்புத் திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன.

விஜய்

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கும், அரசுச் சான்றிதழ்களைப் பெறுவதற்கும் ஏதுவாக இந்த எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்திலேயே புதிய 'இ-சேவை மையம்' ஒன்றும் இன்று திறந்து வைக்கப்படுகிறது. அலுவலகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வீட்டுவசதி, மருத்துவம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்த உள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு நியாயவிலைக் கடை (PDS Shop) மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மின்சார வாகன மின்னூட்ட மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.