மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய்! பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

 
மீனாட்சி

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் இன்று சாமி தரிசனம் செய்தார். கோயிலின் கிழக்கு நுழைவு வாயில் வழியாக சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் வந்திருந்தார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.

vijay

இதன் பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். அண்மையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள நிலையில், கோயிலுக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். மேலும், கும்பாபிஷேகத்துக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ள கோயிலின் முக்கிய பகுதிகளையும் அவர் பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் விஜய்யின் மதுரை பயணத்தையொட்டி விமான நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி அருங்காட்சியகம், மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அவர் பயணித்த சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் மற்றும் அவரது கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் தரிசனம் செய்த காட்சிகள் கவனம் பெற்றுள்ளன.