சென்னையில் நாளை காற்றாலை மின்சார மாநாடு - முதல்வர் விஜய் பங்கேற்பு!
இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்தி மையங்களில் ஒன்றான சென்னையில், புகழ்பெற்ற 'விண்டர்ஜி இந்தியா' (WindEnergy India) மாநாட்டின் 8-வது பதிப்பு நாளை தொடங்குகிறது.
சென்னையில் நாளை தொடங்கும் இந்த மாநாட்டிற்கு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தலைமை தாங்கி மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் மற்றும் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் 350 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான பிரதிநிதிகளும், 20,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பழைய காற்றாலைகளை நவீனமயமாக்கிப் புதுப்பிக்கும் திட்டங்கள் வாயிலாகப் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதற்கு இந்த மாநாடு மிக முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
