நாளை காஞ்சிபுரம் செல்கிறார் முதலமைச்சர் விஜய் - தொழிற்சாலைகளில் நேரில் ஆய்வு!
தமிழக முதலமைச்சர் விஜய் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள முக்கியத் தொழில் நிறுவனங்களில் நேரில் ஆய்வு நடத்தவுள்ளார்.
அரசு நிர்வாகப் பணிகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் நேரில் ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பதூர் மற்றும் ஒரகடம் ஆகிய தொழிற்பேட்டைப் பகுதிகளில் இயங்கும் ஆலைகளை நாளை பார்வையிடுகிறார்.
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள 'டைம்லர் வணிக வாகன உற்பத்தி' தொழிற்சாலையைப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
ஸ்ரீபெரும்பதூர் சிப்காட் பகுதியில் அமைந்து, கண்ணாடி உற்பத்தி செய்து வரும் முன்னணி நிறுவனமான 'செயிண்ட் கோபைன்' ஆலையிலும் முதலமைச்சர் விஜய் ஆய்வு நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்திருந்த நிலையில், தற்போது தொழில் துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு அமையவுள்ளது. முதலமைச்சரின் வருகையை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
