பெரம்பூரில் ரூ.3 கோடியில் 7 புதிய திட்டங்கள் - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

 
சென்னை மாநகராட்சி ஆணையர்

பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக முதலமைச்சருமான விஜய், தனது தொகுதி மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.3 கோடி மதிப்பிலான 7 புதிய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தக் கோரி சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு அதிகாரப்பூர்வக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் சமீபத்தில் தனது சொந்த தொகுதியான பெரம்பூர் பகுதிக்கு நேரில் சென்று, புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்ததோடு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது தொகுதி மேம்பாட்டிற்கான இந்த முக்கியப் பணிகளை அவர் முடுக்கிவிட்டுள்ளார்.

பெரம்பூர் விஜய்

முதலமைச்சரின் கடிதத்தில் பெரம்பூர் தொகுதிக்காக பெரம்பூர் தொகுதி மக்களின் தினசரிப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 6 நவீன பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில், ரூ.50 லட்சம் செலவில் புதிய விளையாட்டு வளாகம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிகப் பணியாளர்களுக்கான பிரத்யேக ஓய்வறை கட்டப்பட உள்ளது.

இவை உட்பட மொத்தம் 7 உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட வரைவுகள் மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பெரம்பூர் விஜய் எம்.எல்.ஏ.அலுவலகம்

முதலமைச்சரின் இக்கோரிக்கையைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர் தொகுதிக்கான உள்கட்டமைப்புப் பணிகள் மிக விரைவில் துவங்கப்படவுள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த விரைவான நடவடிக்கைகள் பெரம்பூர் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.