முதல் கையெழுத்திட்ட கோப்புக்கள்... முதல்வர் விஜய் அதிரடி !

 
vijay vijay


தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் இன்று (10.5.2026) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்ற கையோடு கோட்டைக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அதிரடியாக மூன்று அரசாணை கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது மக்கள் பணியைத் தொடங்கினார்.

முதல்வர் கையெழுத்திட்ட முதல் கோப்பின்படி, தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இனி 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். இரண்டாவதாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படை பெண்களின் புகார்கள் மீது மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் போதிய பணியாளர்களுடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது முக்கிய அறிவிப்பாக, தமிழகத்தை அச்சுறுத்தி வரும் போதைப் பொருட்களை ஒழிக்க மாநிலம் முழுவதும் மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 37 மாவட்டங்களுக்குத் தலா ஒரு காவல் நிலையமும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களுக்குத் தலா ஒன்று என 28 காவல் நிலையங்களும் உருவாக்கப்பட உள்ளன. பதவியேற்ற முதல் நாளிலேயே ஏழை மக்களின் சுமையைக் குறைக்கும் மின்சாரத் திட்டம் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கான அதிரடி நடவடிக்கைகளை விஜய் எடுத்துள்ளது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.