முதல்வர் விஜய் 52-வது பிறந்தநாள் - வண்டலூர் உட்பட 3 உயிரியல் பூங்காக்களில் 2 நாட்களுக்கு இலவச அனுமதி!

 
வண்டலூர் வண்டலூர்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளிட்ட தமிழகத்தின் 3 முக்கிய உயிரியல் பூங்காக்களுக்குப் பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாகச் செல்லலாம் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜூன் 22 (திங்கள்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர் (செங்கல்பட்டு மாவட்டம்), அமிர்தி சிறு உயிரியல் பூங்கா (வேலூர் மாவட்டம்), குரும்பட்டி உயிரியல் பூங்கா (சேலம் மாவட்டம்) ஆகிய 3 பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது என்றார்

வழக்கமான நடைமுறைப்படி பொதுமக்கள் தங்களது அனுமதிச் சீட்டுகளை இணையதளம் (ஆன்லைன்) மூலமாகவே கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பொதுப் பணத்திற்கு எவ்வித இழப்பும் ஏற்படாத வண்ணம், இந்த இலவச அனுமதி நாட்களுக்கான முழுத் தொகையையும் அமைச்சரின் சொந்த அறக்கட்டளையே ஏற்கவுள்ளது. "வண்டலூர் பூங்காவில் தற்போது ஒரு நபருக்கான நுழைவுக் கட்டணம் ரூ.200 ஆக உள்ளது. இந்த இரண்டு நாள்களுக்கான ஒட்டுமொத்த நுழைவுக் கட்டணம் சுமார் ரூ.70 இலட்சத்திற்கும் அதிகமாக வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முழுக் கட்டணத்தையும் நானும் எனது சகோதரரும் இணைந்து நடத்தும் 'வாழ்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை' வனத்துறைக்கு முழுமையாகச் செலுத்திவிடும். முதலமைச்சர் மீதான அன்பின் அடிப்படையில் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளோம்" என்றார். மேலும், கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா பரப்பளவில் சிறியது என்பதால், அங்கு இலவச அனுமதி அளித்தால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்ற காரணத்தால் அது தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

பூங்காவிற்குள் நீண்ட தூரம் நடக்க முடியாத சூழல் உள்ளவர்களுக்காகப் பூங்காவின் உள்ளே இயக்கப்படும் பேட்டரி கார்களுக்கும் சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் வண்டலூர் பூங்காவிற்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் பூங்காவின் உள்ளே செல்லும் பேட்டரி வாகனங்கள் முற்றிலும் இலவசமாக இயக்கப்படும்.

"குழந்தைகள்தான் எங்கள் தெய்வங்கள்; எங்களின் வெற்றிக்கு அவர்களே காரணம். அவர்களின் மகிழ்ச்சிக்காகவே இந்த முக்கிய ஏற்பாட்டைச் செய்துள்ளோம்" என்று அமைச்சர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். முதலமைச்சரின் 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் பசுமைத் தமிழகம் திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

ஜூன் 22-ஆம் தேதி முதலமைச்சரின் வயதைக் குறிக்கும் விதமாகப் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் ஒரே நாளில் 52,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. ஜூன் 22-ஆம் தேதி காலையில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் சிறப்பு மரக்கன்று நடும் விழாவும் நடைபெறவுள்ளது. இதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகளில் வனத்துறை அதிகாரிகள்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.