சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்... அதிகாரிகளுக்கு முதல்வர் வலியுறுத்தல்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் எவ்வித அலட்சியமும் காட்டக் கூடாது என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரத்தை மேம்படுத்துவது, குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட வாரியாகப் பதிவாகியுள்ள குற்றச் சம்பவங்கள் மற்றும் அவற்றின் மீது காவல்துறை எடுத்துள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை போன்ற முக்கிய சம்பவங்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை ஒடுக்குவதோடு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
