கூட்டணி முறிவு... நாடாளுமன்றத்தில் இருக்கையை மாற்ற கனிமொழி எம்பி கடிதம்!

 
கனிமொழி கனிமொழி

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலவும் அசாதாரணமான சூழலால், தேசிய அளவில் இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, திமுக தனது கூட்டணியில் இருந்து காங்கிரஸை அதிரடியாக வெளியேற்றியுள்ளது.

கூட்டணி முறிவின் முதல் நடவடிக்கையாக, நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்கான இருக்கைகளை மாற்றி அமைக்கக் கோரி திமுக எம்பி கனிமொழி, சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதுவரை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகிலேயே திமுக உறுப்பினர்களுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

கனிமொழி

தற்பொழுது காங்கிரஸ் கட்சியுடன் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதால், திமுக உறுப்பினர்களுக்குத் தனியாக அல்லது வேறு பகுதியில் இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தவெக-விற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது, டெல்லி அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவால் ஆத்திரமடைந்துள்ள திமுக தலைமை, அக்கட்சியுடனான உறவை முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்வதில் உறுதியாக உள்ளது. கனிமொழி எம்பியின் இந்தக் கடிதம், திமுக இனி தேசிய அளவில் தனது தனித்துவமான பாதையில் பயணிக்கப் போவதைச் சூசகமாக உணர்த்துகிறது.

கனிமொழி

இந்த இருக்கை மாற்றக் கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெவ்வேறு பகுதிகளில் அமர்ந்திருப்பார்கள். இது தேசிய அரசியலில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.