‘கரையான் போல அரித்து வெற்றிக்கண்ட கரப்பான்’ - இளைஞர் பட்டாளத்தின் தொடர்முயற்சிக்கு வெற்றி!

 
டெல்லி தடியடி

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற நையாண்டி ஆன்லைன் இயக்கமாகத் தொடங்கி, நாடு தழுவிய அளவில் தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர் பட்டாளத்தின் தொடர் எதிர்ப்பிற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

ஒரு நீதிமன்றக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த இயக்கம், இந்திய அரசியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது: கடந்த மே 15 அன்று வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையற்ற இளைஞர்களைக் 'கரப்பான் பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' எனக் குறிப்பிட்டதாகக் கூறப்பட்ட கருத்து சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியது.

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரைச் சேர்ந்தவரும், பாஸ்டன் பல்கலைக்கழக மாணவருமான அபிஜித் தீப்கே, "அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?" என்ற கேள்வியுடன் ஆன்லைனில் ஒரு நையாண்டி அரசியல் அமைப்பைத் தொடங்கினார். "வேலையில்லாமல் இருக்க வேண்டும், ஆன்லைனிலேயே நேரத்தைச் செலவிட வேண்டும்" என்ற நையாண்டி விதிகள் 'ஜென் ஜி' இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. தற்போது இந்த இயக்கத்திற்குச் சமூக வலைதளங்களில் 2 கோடியே 61 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இது பாஜக (95 லட்சம்) மற்றும் காங்கிரஸ் (1.48 கோடி) ஆகிய பிரதான அரசியல் கட்சிகளின் சமூக வலைதளப் பின்தொடர்பாளர்களை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தடியடி

ஒரு நையாண்டி அமைப்பாகத் தொடங்கினாலும், சமூக நலன் சார்ந்த தீவிரப் பிரச்சினையைக் கையில் எடுத்துப் போராட்ட களத்தில் இறங்கியது இந்த அமைப்பு. மே 5 அன்று நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

கடந்த ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்து கொண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். 'சலோ சன்சாத்' பேரணி: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 20,000 இளைஞர்கள் டெல்லியில் திரண்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். போலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பேரணியைக் கலைத்தனர். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது 3 பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன

டெல்லி தடியடி

நீட் முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நீட் தேர்வு முறைகேடு மற்றும் மன உளைச்சலால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். சீரழிந்துள்ள தேசியக் கல்வி அமைப்பில் உடனடிச் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.

நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின்' தீவிரப் போராட்டம் ஆகிய இரட்டை நெருக்கடிகள் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

கரையான் அரிப்பது போலச் சிறுகச் சிறுக எதிர்ப்பைப் பதிவு செய்து, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' சாதித்துள்ள இந்த வெற்றி 12 ஆண்டுகால பாஜக அரசுக்கு ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த இயக்கத்தின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருக்கிறதா என்ற கோணத்திலும் மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.