கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் பணத்தைக் கையாடல் செய்த 4 ஊழியர்கள் கைது!
கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோயில் உண்டியல் பணத்தைக் கையாடல் செய்த ஊழியர்கள் 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கோவை கோனியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா மற்றும் திருப்பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தற்காலிக மற்றும் நிரந்தர உண்டியல்கள் என மொத்தம் 16 உண்டியல்களில் இருந்த காணிக்கைப் பணம், கடந்த ஜூலை 15-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது: உண்டியல் எண்ணும் பணியின் போது, ஊழியர்கள் சிலர் திட்டமிட்டு ஒரு உண்டியலில் இருந்த காணிக்கைப் பணத்தை எண்ணாமல், ஏற்கனவே எண்ணி முடித்த உண்டியல்களோடு சேர்த்து மறைத்து வைத்துள்ளனர்.

தற்காலிக உண்டியல்களை டிராலியில் எடுத்துச் சென்ற போது, கலையரங்கத்தின் பின்புறம் வைத்து உண்டியலில் இருந்த பணத்தை ஊழியர் ஒருவர் தனது பையில் நிரப்புவதை அங்கு வந்த பக்தர் ஒருவர் நேரில் பார்த்துச் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மோசடி உறுதியானது:
சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பிரதீப்குமார் மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரும் இணைந்து இந்தச் சதியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இணை ஆணையர் ரமேஷ் குமார் நடத்திய விசாரணையில், உண்டியலில் இருந்த ₹31,000 பணத்தைப் பாலசுப்ரமணியன் வீட்டுக்கு எடுத்துச் சென்று மறுநாள் 4 பேரும் பிரித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டனர்.

குற்றத்தை ஊழியர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உக்கடம் காவல் நிலையத்தில் கோயில் செயல் அலுவலர் குமார் புகார் அளித்துள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதும், அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
