எங்களை தொட்டா நடப்பதே வேறு... மிரட்டல் விடுத்த கொள்ளைக் கும்பலை தட்டித் தூக்கிய போலீசார்!

 
கோவை

 

கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடர்புடையதாக கூறப்படும் 9 பேர் கொண்ட கும்பலை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவை குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்களை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்த சம்பவத்தில் இந்த கும்பல் போலீசாரின் கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க போலீசார் முயன்றபோது, காரில் இருந்து மிளகாய்ப் பொடியை தூவி தப்பிச் சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த கும்பல் தேனி மாவட்டத்துக்கு சென்றதாகவும், அங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டில் புகுந்து சுமார் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் டெல்லிக்கு சென்று தலைமறைவாக இருந்ததாக தெரிகிறது.

கடந்த மாதம் விமானம் மூலம் மீண்டும் தமிழகம் வந்த அந்த கும்பல், சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒருவரை கொலை செய்துவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.தொடர் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க கோவை மாநகர போலீசார் தனிப்படை அமைத்து செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் உக்கடம் பகுதியில் பதுங்கியிருந்த 9 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஆகாஷ் (23), மனோஜ்குமார் (26), முத்துப்பாண்டி (24), அண்ணாமலை (25), அருண்பாண்டி (27), புவனேஷ் (22), அருண் (20), ராமர் (23), கோபிநாத் (23) என போலீசார் தெரிவித்துள்ளனர்.இவர்களில் ஆகாஷ் மீது 25 குற்ற வழக்குகளும், அருண் மீது 31 வழக்குகளும், முத்துப்பாண்டி மீது 18 வழக்குகளும் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். மற்றவர்களுக்கும் பல்வேறு வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 9 பேரிடம் இருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் தொனியில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.