மீண்டும் கைதி தப்பி ஓட்டம்... கோவை சிறை வளாகத்தில் திடீர் பரபரப்பு.... !
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து விசாரணைக் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த ராகவன் (25) என்பவரை, கோவை மாவட்டம் அன்னூர் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக கோவை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது சிறை வளாகத்தில் காவலர்கள் பாதுகாப்பில் இருந்த ராகவன், திடீரென காவலர்களைத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருட்டு வழக்கில் பெங்களூருவில் ஏற்கெனவே தண்டனை பெற்றிருந்த ராகவன், சில மாதங்களுக்கு முன்பு கோவையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது போலீஸ் பிடியிலிருந்து தப்பியதாகவும், பின்னர் பவானியில் மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அவரைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நபர் இரண்டாவது முறையாக காவல் கண்காணிப்பில் இருந்து தப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
