தனியாக தூங்கிய மூதாட்டி... ஓட்டை பிரித்து புகுந்த முகமூடி கொள்ளையன்! 7.5 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை

 
மூதாட்டி

மயிலாடுதுறை மாவட்டம் கோமல் பாடகச்சேரி கிராமத்தில் தனியாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டுக்குள் நள்ளிரவில் ஓட்டை பிரித்து புகுந்த மர்மநபர், அவரை மிரட்டி 7.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோமல் பாடகச்சேரி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்ததாக கூறப்படுகிறது.

நகை கொள்ளை

தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை மிரட்டிய அந்த நபர், அவரது கழுத்தை நெறித்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மொத்த எடை 7.5 சவரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் ரோந்து போலீஸ் காவலர் கொலை கொள்ளை

இதுகுறித்து மூதாட்டி மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை பிடிக்க மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா உத்தரவின்பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொள்ளையனின் நடமாட்டம் மற்றும் சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டில் நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.