ரூ.1-க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு அதிர்ச்சி! 😔 இலவச கேஸ் சிலிண்டர் நிறுத்தம்.. கலெக்டரிடம் மனு

 
இட்லி

 

கோவை வடவள்ளி அருகே வடிவேலம்பாளையத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டிக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் சிலிண்டர் வழங்கக் கோரி அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

85 வயதான கமலாத்தாள் பாட்டி, ஏழை மக்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நீண்ட காலமாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். அவரது இந்த சேவை பல ஆண்டுகளாக பொதுமக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

ரூ.1க்கு இட்லி விற்கும் ‘இட்லி அம்மா’வுக்கு சொந்த வீடு!

அவரது சமையல் தேவைக்காக இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த சிலிண்டர் விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கமலாத்தாள் பாட்டி தெரிவித்துள்ளார்.

ரூ.1க்கு இட்லி விற்கும் ‘இட்லி அம்மா’வுக்கு சொந்த வீடு!

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் நிலையில், சமையல் எரிவாயுவுக்கான செலவை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும், இதனால் இட்லி விற்பனை தொழிலை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற கமலாத்தாள் பாட்டி, தனக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டரை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு தொடர்ந்து ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் தனது சேவையை தடையின்றி தொடர முடியும் என கமலாத்தாள் பாட்டி எதிர்பார்க்கிறார்.