கோவை மாணவர் அகிலன் உயிரிழப்பு: 3-வது நாளாக உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம்
கோவையில் பிளஸ்-1 மாணவர் அகிலன் உயிரிழந்த விவகாரத்தில், அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளாக நீடிக்கும் இந்தப் போராட்டத்தில், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பீளமேட்டைச் சேர்ந்த 16 வயது அகிலன், பள்ளியில் சாதிப் பாகுபாட்டுக்கு ஆளானதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் இரு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆசிரியர் விஜயகுமாரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் இரு மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் குடும்பத்தினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
