சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு... இருவர் குற்றவாளிகள் ... போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என கோவை போக்சோ நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வலுவான சாட்சியங்கள், தடயவியல் அறிக்கைகள் மற்றும் காவல்துறையின் விரிவான குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் அடிப்படையில் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என நீதிபதி இன்று அறிவித்தார்.
மேலும், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள இருவருக்குமான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கோவை போக்சோ நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்
