திருச்செந்தூரில் வசூல் வேட்டை... "உடனே அறநிலையத்துறை அமைச்சரை நியமியுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு என்று தனியாக ஓர் அமைச்சரை உடனே நியமிக்க வேண்டும் என பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முதலமைச்சர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று சில நபர்களின் வசூல் வேட்டையால் தனது புனிதத்தை இழந்து வருவது பெரும் வேதனையளிக்கிறது. மன நிம்மதிக்காகவும், வேண்டுதல்களை நிறைவேற்றவும் வரும் ஏழை எளிய பக்தர்களிடம், "விரைவில் சுவாமி தரிசனம் செய்து வைக்கிறோம்" என்று ஆசை வார்த்தைகளைக் கூறிச் சில புரோக்கர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் பேச்சை நம்பி ஒரு நபருக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை கொடுத்துப் பக்தர்கள் ஏமாந்து வருகின்றனர். இத்தகைய புகார்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் இருப்பதை கோயில் நிர்வாகம் அறியவில்லையா? அல்லது அறிந்தும் தங்களுக்கு வரும் கமிஷன் போய்விடும் என்று கண்டுகொள்ளாமல் இருக்கிறதா என்று தெரியவில்லை. மேலும், சில நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசலால் ஆத்திரமடைந்த பக்தர்கள் கேட்டை உடைத்துக் கொண்டு ஆலயத்தினுள் நுழைந்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.
இதுவரை இந்து சமய அறநிலையத் துறைக்கென்று அமைச்சரை நியமிக்காமல் தமிழக முதல்வர் விஜய் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே, அவர் விரைவில் இத்துறைக்கு என்று புதிய அமைச்சரை நியமிக்க வேண்டும்.

அறநிலையத்துறைக்கு அமைச்சர் பொறுப்பேற்றவுடன், கோயில்களில் நடக்கும் இது போன்ற சட்டவிரோத வசூல் மற்றும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி, பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி மன நிம்மதியுடன் சுவாமி தரிசனம் செய்யத் தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
