கல்லூரியில் மாணவியின் செயலால் காலவரையற்ற விடுமுறை அறிவித்த நிர்வாகம்!
சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அடுத்தடுத்து நடைபெற்ற தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிச் சம்பவங்கள் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு இரண்டாம் ஆண்டு படித்துவந்த ஷெரின் (19) என்ற மாணவி, கல்லூரி வளாகத்தில் உள்ள 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் இந்த முடிவை எடுப்பதாக அவர் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பாக கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் ஏற்படுத்திய சோகத்திலிருந்து மீள்வதற்குள், மறுநாளே அதே கல்லூரியில் இ.சி.இ. இரண்டாம் ஆண்டு படிந்து வந்த சசிதரன் (19) என்ற மாணவர் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். மாணவர் முறையாகக் கல்லூரிக்கு வராததால் நிர்வாகம் கண்டித்ததே இந்த விபரீதத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு அதிர்ச்சிகரமான சம்பவங்களால் சக மாணவர்கள் கலக்கமடைந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்ததுடன், விடுதியில் தங்கிப் படித்த மாணவ-மாணவிகளை உடனடியாக வெளியேற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது. இருப்பினும், இக்கல்லூரி வருகிற 7-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என மாணவர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
