விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

 
விஜய் விஜய்

தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற போது விபத்தில் சிக்கிய திருச்சி கல்லூரி மாணவர் விக்னேஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  விஜய் கார் பின்னால் சென்ற போது விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் விக்னேஷ், கடந்த 20 நாட்களாகப் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த மார்ச் 4-ம் தேதி விஜய், தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தார். அப்போது அவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷும் தனது நண்பர்களுடன் தஞ்சாவூர் சென்றிருந்தார். விஜய் தனது காரில் அங்கிருந்து புறப்பட்டபோது, அவரைக் காண்பதற்காக விக்னேஷ் தனது இருசக்கர வாகனத்தில் விஜய்யின் காரைத் துரத்திச் சென்றுள்ளார்.

விஜய்

அதிவேகமாகச் சென்ற போது எதிர்பாராத விதமாக விக்னேஷின் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

விக்னேஷின் உடல்நிலை குறித்து அறிந்த விஜய், அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததோடு, உரியச் சிகிச்சை அளிக்கத் தேவையான உதவிகளைச் செய்யத் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், மூளையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக விக்னேஷ் தொடர்ந்து கோமா நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தவெக விஜய்​​​​​​​

கல்லூரி மாணவரான விக்னேஷின் மறைவு அவரது குடும்பத்தினரையும், தவெக தொண்டர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யைக் காண வேண்டும் என்ற ஆவலில் சென்ற இளைஞர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.