விநாயகர் ஊர்வலத்தில் கல்லூரி மாணவி பலி; அதிக டிஜே சத்தத்தால் நேர்ந்த துயரம்!
இப்படியெல்லாம் கூட மரணம் நேருமா என்று பெற்றோர்களும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, ஒலிபெருக்கியில் எழுப்பப்பட்ட அதீத டிஜே சத்தத்தின் அதிர்வு தாங்காமல் 17 வயது கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்த 17 வயது மாணவி பிரதீக்ஷா வர்மா, கல்லூரியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.

அந்த ஊர்வலத்தில் காதை அடைக்கும் அளவுக்கு அதீத சத்தத்துடன் டிஜே இசை ஒலிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெருஞ் சத்தத்தின் அதிர்வு மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக மாணவி திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதீத சத்தத்தால் மாணவி ஒருவரின் உயிர் பறிபோன இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
